Prev my images Next

Monday, October 16, 2017

உங்கள் உள்ளங்களில்............

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பினை நாம் 2001ஆம் ஆண்டு ஆரம்பித்துக் கொண்டோம். இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில் அரசியற் தன்மைகளும், நாட்டு நிலைமைகளும் மிகவும் வேறுபட்ட நிலமையில் இருந்தன. அந்நேரம் சீரான முறையிலும், ஒழுங்கான முறையிலும் தொடர்புகளைப் பேண முடியாமல் இருந்தது. நாம் சில அடக்குமுறைகளையும், ஆதிக்கத் தன்மைகளையும் எதிர்கொண்டோம். எமது சங்கத்தை கொண்டு நடாத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். இருந்தும் நாம் அரசியற் தன்மைகளையும், மத வேறுபாடுகளையும், இன முரண்பாடுகளையும் ஓரங்கட்டி, தமிழ்மொழி வளர்ச்சியிலும், தமிழின முன்னேற்றத்திலும் கவனத்தை ஏற்படுத்தி, எழுத்தாளர்களையும், இலக்கிய கர்த்தாக்களையும், வாசகர்களையும் ஒன்றினைத்து வளர்ப்பதில் அயராது ஈடுபட்டுப் பாடுபட்டோம் என்றால் மிகையாகாது. இச்செயற்பாட்டில் நாம் பல வெற்றிகளை அடைந்துள்ளோம். இந்த வெற்றிகளின் உச்சமான நிலையாக, இன்று தாயகத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுப்பாக்கி உங்கள் கைகளில் தந்திருப்பதில் நாம் மிகுந்த பெருமையையும், அளப்பரிய மகிழ்வையும் கொள்கின்றோம்.


எமது செயற்பாட்டில் நாம் கண்டுவந்த பாதைகள் மிகவும் கரடுமுரடான கல்லும், முள்ளும் கொண்ட பாதையாக இருந்தது. இக்கல்லும் முள்ளும் நிறைந்த பாதையை நாம் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். இந்தச் சங்கடமான காலகட்டத்தில் எம்மோடு இருந்து செயற்பட்டு, இரவுபகலாக உழைத்த யாவரையும் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கௌரவித்து, நன்றி பகிர்ந்து கொள்கின்றது.

நாம் இன்று வரை தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகவும், இலக்கிய கர்த்தாக்களின் முன்னேற்திற்காகவும், தமிழக் கல்வி வளர்ச்சிக்காகவும் ஆற்றிய பணிகளை மனத் தைரியத்துடனும், பெருமிதத்துடனும் பதிவுக்கியுள்ளோம். இதுவும் ஒரு கதைதான். புறநானூறு கூறுவது போன்ற, ஒரு நாயகனின் வீரக் கதைதான். அந்தக் கதாநாயகனின் செயற்பாட்டை மட்டுமே பதிவு செய்கின்றோம். களங்களும்காட்சிகளும், கோலங்களும், வேதனைகளும், விரத்திகளும், துன்பங்களும், இன்பங்களும் உங்கள் உள்ளங்களில்.......


இலண்டன் வாழ் நூலகவியலாளர் திரு.என்.செல்வராஜா அவர்களை, எமது சங்கத்தின் ஆரம்பச் செயற்பாடுகள் பற்றிய பொதுக் கூட்டத்திற்குச் சிறப்பாளராக அழைத்து, அவரைக் கௌரவப்படுத்திச் சிறப்பித்ததோடு, அவரால் தொடர்ந்து வெளியீடு செய்யப்பட்டுவரும் ....வது 'நூற்தேட்டம்' என்ற ஆவணப்பதிவு நூலை விற்பனை செய்து உதவினோம். 

இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும், யாழ் ஈழநாடு, தினக்கதிர் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், ஐம்பது வருட பத்திரிகைத்துறை அநுபவம் கொண்டவருமான திரு.எஸ்.எம். கோபலரட்ணம் அவர்களை, வரவேற்று 22.06.2002 இல்  யேர்மனி, டியுஸ்பேர்க் நகரில் கௌரவித்துச் சிறப்பித்ததோடு, அவரால் எழுதப்பட்ட “ஈழமண்ணில் இந்தியச்சிறை என்னும் நூலின் அறிமுக விழாவையும் நடாத்தி, விற்பனை செய்து உதவினோம்.

இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும், யாழ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமை புரிந்தவரும், தற்போது பிரான்ஸ் பாரிசில் வசிப்பவருமான திரு.எஸ்.கே.காசிலிங்கம் அவர்களை வரவேற்று 21.09.2002இல் டியுஸ்பேர்க் நகரில் நூல் அறிமுக விழாவை நடாத்தி கௌரவித்தோம். அவரால் எழுதப்பட்ட “என்னுள் என்னோடுஎன்னும் நூலை அறிமுகம் செய்து, விற்பனை செய்து உதவினோம்.

எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கார்த்தாக்களில் ஒருவரும், கடந்த பத்து வருடங்களாகத் தலைவராக இருந்து செயற்படுபவரும்“மண் சஞ்சிகையின் ஆசிரியருமான வ.சிவராஜா அவர்களின், பத்திரிகைத்துறையில் 25 ஆண்டு காலப்பணியை பூர்த்தி செய்தமைக்காக அவரால் எழுதப்பட்ட 50 சிறுகதைகளின் தொகுப்பான “கல்லறைப்பூக்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியீடு செய்து, விற்பனை செய்து உதவினோம். 25.08.2001இல் டியுஸ்பேர்க் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் வ.சிவராஜா அவர்களைக் கௌரவித்துச் சிறப்பித்தோம்.


ஜேர்மனியிலிருந்து வெளிவரும் “வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் திரு.மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றமைக்காக 10.05.2003 அன்று வூப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட பாராட்டு விழாவில் நமது எழுத்தாளர் சங்கத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.


இளம் கவிஞர் செல்வி.வாசுகி குணராசா அவர்களால் எழுதப்பட்ட “விழி என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவினை டியுஸ்பேர்க் நகரில் 19.07.2003 அன்று நடாத்தி, அவரைக் கௌரவித்துப் பாராட்டி, நூலை விற்பனை செய்து உதவி புரிந்தோம். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இலங்கையின் முன்னாள் பா.உ. கலாநிதி திவ்வியநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரையும் கௌரவித்து சிறப்பித்தோம்.


இங்கிலாந்தில் வசிப்பவரும், கவிஞரும், எழுத்தாளருமான திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்களின் மூன்று கவிதை நூல்களை 5.10.2003 அன்று டியுஸ்பேர்க் நகரில் அறிமுகப்படுத்தி, அவரைக் கௌரவித்துச் சிறப்பித்தோம். அவரது நூல்களான “நாற்று, “தமிழிசைப் பாடல்கள், “வானொலிக் கவிதைகள் ஆகியவற்றை விற்பனை செய்து உதவினோம். இதே விழாவில் இந்தியாவிலிருந்து வருகை தந்த உலகத் தமிழ்ப் பேரவைத் தலைவர் டாக்டர் இரா.சனார்த்தனம் அவர்களை வரவேற்று, கௌரவித்துச் சிறப்பித்ததுடன், அவரின் சில நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்து உதவினோம். இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

பிரான்ஸ் பாரிஸ் நகரில் வசிப்பவரும், ஏ.பி.சி. வானொலி அறிவிப்பாளரும், கவிஞருமான திரு.வண்ணை தெய்வம் அவர்களை 9.11.2003 அன்று டோர்ட்முண்ட் நகரில் கௌரவித்துச் சிறப்பித்ததுடன், அவரால் எழுதப்பட்ட “யாழ்ப்பாணத்து மண்வாசனை என்னும் நூலை அறிமுகம் செய்து விற்பனை செய்து உதவினோம்.

எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர், கவிஞர் திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்களின் “முடிவல்ல ஆரம்பம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவை 24.01.2004 அன்று டியுஸ்பேர்க் நகரில் நடாத்தி, அவரைக் கௌரவித்துச் சிறப்பித்து நூலை விற்பனை செய்து உதவினோம்.


எழுத்தாளர் திரு.சதா சிறிகாந்தா அவர்களின் “ஆரோக்கிய வழிகாட்டி” என்னும் மருத்துவநூல் வெளியீட்டு விழா (8.02.2004) டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் அவரைக் கௌரவித்துச் சிறப்பித்து, நூல்களை விற்பனை செய்து உதவினோம்.

கவிஞர் திரு.த.சு.மணியம் அவர்களின் “ஓர் ஆத்மாவின் இராகம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா 10.04.2004 அன்று சால்ஸ்ஹவுசன் நகரில் நடைபெற்றது. அவ்விழாவில் திரு.த.சு.மணியம் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்து, நூலை விற்பனை செய்து உதவினோம்.


பத்து வருடங்களுக்கு முன்பு சிறுவர்களுக்கான “சிறுவர் அமுதம் என்னும் சஞ்சிகையை வெளியிட்டுத் தமிழ்பணி செய்த அமரர்.சின்ன இராஜேஸ்வரன் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டத்தை 19.04.2004 அன்று டியுஸ்பேர்க் நகரில் நடாத்திச் சிறப்பித்தோம்.


கவிஞர் திரு.த.சு.மணியம் அவர்களின் “ஓர் ஆத்மாவின் இராகம்(கவிதைநூல்), பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் கவிஞர் திரு.வண்ணை தெய்வம் அவர்களின் “தாயக தரிசனம், பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் கவிஞர் திரு.சரீஸ் அவர்களின் “விடியலின் முகவரி(கவிதைநூல்) ஆகிய மூன்று நூல்களும் 20.06.2004 டியுஸ்பேர்க் நகரில் அறிமுகம் செய்து வைத்தோம். நூல்கள் விற்பனை செய்து உதவினோம்.


இவ்விழாவில் பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து வருகை தந்த இலங்கை கல்வி  அமைச்சின் மேலதிக செயலாளரும், மூத்த எழுத்தாளருமான திரு.தில்லைநடராஜா அவர்கள் கௌரவிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும், புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவற்றுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உதவக்கூடிய வழிகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது செயலாளரும், எழுத்தாளரும், கவிஞருமான, தமிழ்மணி. சி.இராஜகருணா அவர்களின்  ஒலி இறுவட்டு வெளியீட்டு விழா 16.10.2004இல் லூடன்சைட் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் திரு.இராசகருணா அவர்களை பாராட்டிக் கௌரவித்ததோடு, இறுவட்டுகள் விற்பனையிலும் உதவினோம்.

எழுத்தாளர் சங்கச் செயற்குழு உறுப்பினரும், சங்கீத ஆசிரியையுமான திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா அவர்களின் “பெற்றோரே தெய்வங்கள்என்னும் ஒலி இசை இறுவட்டு வெளியீட்டு விழா 14.05.2005 இல் வீட்சே நகரில் நடைபெற்றது. அவர்களைப் பாராட்டிக் கௌரவித்ததோடு, விற்பனை உதவியும் செய்தோம்.

ஜேர்மனியில் பரந்து வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் என இருபத்தி நான்கு பேரின் விபரங்களையும், அவர்கள் ஜேர்மனியில் ஆற்றிவரும் பொதுச்சேவைகளையும் எம்மோடு ஒத்துழைப்பு வழங்கியவர்களின் துணையோடு தொகுத்து “ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் என்ற ஆவணப்பதிவு நூலை பதிப்பித்துத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக டியுஸ்பேர்க் நகரில் 23.09.2006 இல்  வெளியிட்டோம்.இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 4 என்ற புன்னியாமீன் அவர்களின் நூறாவது நூல் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரக்கொத்து பாகம் 1 என்று வெளிவந்தது. கண்டி சிந்தனை வட்டத்தின் தலைவரும், எழுத்தாளருமான இவரது நூறாவது நூலினை 16.03.2007 இல் டியுஸ்பேர்க் நகரில் வெளியிட்டு வைத்தோம் என்பதும் இந்நூல் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களின் ஆவணப்பதிவாக வெளிவந்துள்ளது என்பதுமாக இந்நூலினை வெளியிட்டு வைத்ததில் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்நிகழ்வில் திரு.புன்னியாமீன் அவர்கள் சார்ப்பில் நூலகவியலாளர் திரு.என்.செல்வராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவரை நாம் சிறப்பு விருந்தினராகக் கௌரவித்துப் பாராட்டினோம்.


அத்தோடு அதே ஆண்டில் இந்த நூறாவது நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள் யாவற்றையும் பதிவு செய்து படங்களுடன், வெளியீட்டு விழா மலர் என்று வெளியிட்டு வைத்தோம்.


ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களில் பதின்நான்கு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து “நிறங்கள் என்ற பெயரில் டோர்ட்முண்ட் நகரில் வெளியிட்டோம். 04.07.2009இல் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் கலாநிதி ஆ.க. மனோகரன் (இலண்டன்) அவர்கள் எழுதிய “இலங்கை தேசிய இனமுரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தோம். அத்தோடு கலைவளன் சிசு.நாகேந்திரன் (அவுஸ்திரேலியா) அவர்கள் எழுதிய “பிறந்த மண்ணும் புகலிடமும் என்ற நூலையும் அறிமுகம் செய்து வைத்தோம். இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக இலங்கையின் தமிழ் பத்திரிகையான வீரகேசரியின் வாரவெளியீட்டு ஆசிரியர் திரு.வ.தேவராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ்விழாவில் டென்மார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.வி.ஜீவகுமாரன் அவர்களின் “மக்கள்.. மக்களால்... மக்ககளுக்காக என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தோம். திரு.வி.ஜீவகுமாரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஈழத்து முற்போக்கு எழுத்தாளரான மறைந்த எஸ்.அகஸ்த்தியர் அவர்களின் “மானிட தரிசனங்கள் “லெனின் பாதச்சுவடுகளில் ஆகிய நூல்களை 25.10.2009இல் டியுஸ்பேர்க் நகரில் அறிமுகம் செய்து வைத்தோம். எஸ்.அகஸ்தியர் அவர்களின் மகள் நவஜோதி யோகரட்ணம் (இலண்டன்) அவர்களின் அனுசரணையோடு இவ்விழா சிறப்புற நடைபெற்றது. அகஸ்தியர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அவரின் இறுதிச்சடங்கின்போது பாரிசில் வெளியிட்டு வைத்தனர். அதனை நாம் மறுபிரசுரம் செய்து இவ்விழாவில் வெளியிட்டோம்.


ஜேர்மனியில் இருந்து இருமாதங்களுக்கொருமுறை வெளிவரும் “மண் சஞ்சிகையின் இருபதாவது ஆண்டுவிழா டியுஸ்பேர்க் நகரில் 17.04.2010இல் நடைபெற்றபோது அதன் ஆசிரியரும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான திரு.வ.சிவராஜா அவர்களை பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா வழங்கி கௌரவித்தோம்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 10.01.2011 இல் கொழும்பில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு நிதி வழங்கி உதவினோம். எமது இரு கட்டுரைகள் விழாவில் வாசிக்கப்பட்டு, விழா மலரில் வெளியாகின. இவ்விழாவில் எமது சங்கத்தின் பிரதிநிதியாக திரு.க.பத்மகுணசீலன் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தார்.

எமது சங்கத்தின் உறுப்பினரான திரு.க.பத்மகுணசீலன் அவர்களின் முப்பதாவது ஆண்டு திருமணநாள் விழா வுப்பெற்றால் நகரில் 29.10.2011இல் நடைபெற்றபோது, திரு.திருமதி.பத்மகுணசீலன் ஜெயகுமாரி தம்பதிகளை பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா வழங்கிக் கௌரவித்தோம்.


எமது சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று கடந்த பல வருடங்களாக இருந்து செயலாற்றிச் சேவைகள் பல புரிந்த திரு.தமிழ்மணி.அருந்தவராசா அவர்களினால் எழுதப்பட்ட 'ஜேர்மனியில் தமிழர் வரலாறு',  'தாய்நிலம்', 'ஆன்மாவின் வாசனை', 'தாலி', 'நலமாய் வாழ', 'காலடிச்சுவடுகள்', ஆகிய ஆறு நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட்டு வைத்ததோம். அவரை கௌவித்துப் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, 'பல்கலைச்சுடர்' என்ற பட்டத்தையும் வழங்கினோம்.


யேர்மன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் இருபத்தைந்து தமிழ்ப் பிள்ளைகளின் எழுத்தாற்றலையும், மொழியறிவையும் வளர்க்கும் நோக்கில் தமிழ், யேர்மனி என்ற இருமொழிகளிலும் கவிதைகளை எழுத்தக்கம் செய்து பெற்று 'நாங்கள்' என்ற பெயரில் இருமொழிக் கவிதை நூலையும், யேர்மனியில் பல்வேறு பகுதிகளில் வாழும் பதினெட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தொகுத்து 'சங்கமம்' என்ற கவிதை நூலையும் டோட்முண்ட் நகரத்தில் 30.06.2012 இல் வெளியிட்டு வைத்தோம். இவ்விழாவிற்குப் பிரதம விருந்தினர்களாக கனடா நாட்டில் வாழ்ந்துவரும், இலங்கை நாட்டில் முன்னாள் உப அதிபராக சேவை புரிந்த திரு. தம்பிப்பிள்ளை கந்தையா அவர்களும், ஆசிரியை திருமதி.கந்தையா ரஞசிதம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அவர்களை  நாம் அழைத்துக் கௌரவித்துப் பாராட்டினோம்.


எமது சங்கத்தின் உறுப்பினர் திருமதி.சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களால் எழுதப்பட்ட என்னையே நானறியேன் என்ற புதினம் (நாவல்) நூல் வெளியீட்டு விழா 20.07.2013இல் கெல்சென்கேயன் நகரில் நடைபெற்றபோது அவரைப் பாராட்டிக் கௌரத்ததோடு, உதவிகள் புரிந்தோம்.


தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவினை, முன்ஸ்ரர் நகர ஆன்மீகப் பணியகம், பிரான்ஸ் நாட்டுப் பாரீஸ் நகரத்தில் இயங்கும் கவிஞர் கண்ணதாசன் கலையரங்கம்  இவர்களுடன் இணைந்து 29.06.2013இல் முன்ஸ்ரர் நகரத்தில் நடாத்தினோம்.வாழும்போதே கலைஞர்களை வாழ்த்துவோம் என்ற திட்டக் கொள்கையின் செயற்பாடாக 27.04.2014 அன்று யேர்மன் டுயிஸ்பேர்க் நகரத்தில் பாராட்டுவிழா ஒன்றினை நடாத்தினோம். இப்பாராட்டு விழாவில் திரு.க.பத்மகுணசீலன் அவர்கiயும், திரு.கதிரிப்பிள்ளை அருந்தவராசா அவர்களையும், திருமதி.கலைவாணி ஏகானந்தராசா அவர்களையும், திரு.பொன்னையா புத்திசிகாமணி அவர்களையும், திருமதி.ஜெயபாக்கியம் நடேசன் அவர்களையும், அவர்கள் தனித்தனியே ஆற்றிய, இலக்கிப் பணிகளையும், மனிதநேயப் பணிகளையும், சேவைகளையும் விழாவில் எடுத்துக்கூறிச் சிறப்பித்துப் பராட்டுப் பத்திரங்களையும், வாழ்த்துபா மடல்களையும் வழங்கியதோடு, பொன்னடைகளைப் போர்த்தியும்சந்தன மாலைகளை அணிவித்தும் கௌரவித்தோம்.


எமது சங்கத்தின் உறுப்பினர் திருமதி.ஜெயபாக்கியம் நடேசன் (ஜெயாநடேசன்) அவர்களால் எழுதப்பட்ட அர்ச்சனை மலர்கள் என்ற கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 03.05.2014இல் முன்ஸ்ரர் நகரத்தில் நடைபெற்றது. விழா நடப்பதற்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் புரிந்து விழாவை சிறப்பாக நடத்த உதவினோம்.

எனது தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கும் யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை தனது இருபத்தைந்தாவது ஆண்டு விழாவினை 14.06.2014 இல் டோட்முண்ட் நகரத்தில் நடாத்திய வேளையில், ஜேர்மனி தமிழ் கல்விச் சேவை பொறுப்பாளர் ஸ்ரீ ஜீவகன் அவர்களை அவ்விழாவில் கௌரவித்து வாழ்த்துப்பா தந்தும், பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் வாழ்த்தியதோடு, செந்தமிழூர்தி என்ற பட்டத்தினையும்  வழங்கினோம்.


11.06.2016 அன்று எமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமாகிய சந்திரகௌரி சிவபாலன்(கௌசி) அவர்களுடைய முக்கோண முக்குளிப்பு என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட்டு வைத்தோம்.


இப்பதிவுகள் யாவற்றுக்குமான செயற்பாடுகளைச் செய்தவர்களில் முதன்மையானவர்களாக இன்றுவரை பெரும் பாராட்டுக்கும், சிறப்புக்குமுரியவர்களாக முன்னைநாள் செயலாளர் திரு.க.அருந்தவராசா அவர்களையும், தலைவர் திரு.வ.சிவராசா அவர்களையும், உப தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்கள், பொருளாளர் திரு.அ.புவனேந்திரன் அவர்களையும் சங்க வரலாற்றுச் செயற்பாட்டில் பதிவுக்குள்ளாக்கக் கடமைப்பட்டுள்ளோம். பலவிதமான இடர்பாடுகளுக்கு மத்தில் செயலாற்றி வந்தோம். பலவித நேரச் செலவுகளையும், பொருள் செலவுகளையும் எதிர் கொண்டோம். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு செயற்பட்டே மேற்காட்டிய பதிவு நடவடிக்கைகைளை நிறைவேற்றிக் கொண்டோம். இதில் இன்றைய செயலாளருக்கும் பங்குண்டு. இவ்வாறான செயற்பாடுகள் யாவற்றுக்கும் பலவிதமான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கிவரும் மற்றைய உறுப்பினர்கள் யாவரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாவார்கள்.


எமது சங்கத்தின் சேவைகளையும், அதன் செயற்பாடுகளையும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற பெருவிருப்புடன் இத்தரவுகளைப் பதிவுக்குள்ளாக்கின்றோம். இப்பதிவுகளை நீங்கள் வாசித்து எமது செயற்பாட்டுக்கும், சேவைக்கும் ஆக்கபூர்மான கருத்துக்களையும், உதவிகளையும் புரிதல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம். சமூக நலன்கருதி எழுதுவோம்! முழுமையாக வாசிப்போம்! வாசிப்புத்தன்யை மேன்மேலும் வளர்ப்போம் வாருங்கள் எனக் கேட்டு விடைபெறுகின்றோம்.நன்றி.


No comments:

Post a Comment