Prev my images Next

Tuesday, October 24, 2017

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கலைஞர் கௌரவிப்பு!

யேர்மனியில்.........  
யேர்மனி  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கலைஞர் கௌரவிப்பு!
 'குதிரை வாகனம்' நாவல் அறிமுகம்.....
14.10.2017 
                                                                                             
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் காலத்திற்குக்காலம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியோரையும், கல்விமான்களையும் இலக்கியவாதிகளையும் சமூகத்தொண்டுகள் புரிந்தோரையும் அழைத்து மதிப்பளித்து சிறப்பான பாராட்டுகளை வழங்கி, அவர்களை பற்றிய செய்திகளை வெளிக்கொணர்ந்து பாராட்டுவது நடைமுறை. அந்தவகையில் சென்ற 14.10.2017 சனிக்கிழமை கௌரவிப்பு விழா சிறப்புற நடைபெற்றது. 

இவ்வருடம் இக் கௌரவத்தை நான்கு பேருக்கு வழங்கி இச்சங்கம்  மகிழ்ந்தது கவிஞர் முகில்வாணன், எழுத்தாளர்  திரு வி.ஜீவகுமாரன்(டென்மார்க்), கவிஞர் ப. பசுபதிராசா, வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி திரு. தம்பையா ராஜன் ஆகிய இந்த நால்வருமாவர். இவர்கள் நால்வரும் வெள்ளிவிழாக் கண்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுமாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்படி நிகழ்வு யேர்மனி டோட்முண்ட் நகரில், திரு சபேசன் அவர்களின் தமிழர் அரங்க மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திருவ.சிவராசா அவர்கள் தலைமை தாங்கினார். மாலை மூன்று மணிக்கு இவ்விழா ஆரம்பமாகியது. மங்கள விளக்கை டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர். திருமதி கலாநிதி ஜீவகுமாரன், திருமதி. ஐரின் இராசப்பா (முகில்வாணன்) ஆகிய இருவரும் ஏற்றிவைத்தனர். மௌன அஞ்சலியைத் தொடர்ந்து வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் பொன்.புத்திசிகாமணி அவர்கள் வழங்கினார். 


தமிழ் மொழி வாழ்த்தை டோட்முண்ட் வள்ளுவர் பாடசாலை சங்கீத ஆசிரியை திருமதி ஞானாம்பாள் விஐயகுமார் அவர்களின் மாணவிகள் செல்விகள் தமிழினி பரமேஸ்வரன், கோசிகா சத்தியசீலன் ஆகியோர் இனிய குரலில் பாடி மகிழ. வரவேற்பு நடனத்தை ஒபகௌசன் நகர அறிவாலய பாடசாலை மாணவிகள் செல்விகள் பரிஸ்ரா மரியதாஸ், ஸ்ரெவானி மகாலிங்கம், கவிநிலா சபேசன் ஆகியோர் ஆடிச்  சிறப்பித்தனர். தலைமை உரையை சங்கத்தின் தலைவர் திரு வ.சிவராசா அவர்கள் நிகழ்த்தினார். அவரது உரையில் சங்கத்தின் வளர்ச்சி வரலாறு சாதித்த நிகழ்வுகள் முக்கியமாக இருந்தது. 


வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்கின்ற உன்னத பணியை எமது சங்கம் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தி வருவதை நீங்கள் பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையிலேயே இந்தப் புகழ்பெற்றவர்களை மதித்து அழைத்து இன்று கௌரவிக்கின்றோம். உங்கள் முன் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் வாழ் நாளில் தமிழுக்கும் தமிழ் இலக்கியம் கலை கலாச்சார மொழி வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர்கள். காலத்தால் மறக்க முடியாதவர்கள். இவர்களைக் கௌரவிப்பதால் எமது சங்கம் பெருமை அடைகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள் என்றார். எங்கள் அழைப்பை எற்று வந்து இன்று பாராட்டுப்பெறும் நால்வருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

சங்கத்தின் நிர்வாக உறுப்பினரும் சங்கீத ஆசிரியையுமான திருமதி கலைவாணி ஏகானந்தராசா அவர்கள் திரு கவிஞர் முகில்வாணன் அவர்களைப்பற்றி வாழ்த்திக் கூறும்போது அவர் இந்தச் சமுதாயத்திற்கும் எமது மொழிக்கும் எமது இனத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது. அனைத்தையும் மக்கள் மறந்திருக்க நியாயமில்லை என. அவரைப்பற்றிய விரிவான அறிதலுடன் சிறந்த வாழ்த்துரை ஒன்றை வழங்கினார். 
வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்களை சங்கத்தின் செயலாளர்  பொன்.புத்திசிகாமணி அவர்கள் வாழ்த்தியும் அவர் ஆற்றிவரும் கலைப்பணியைப் போற்றியும் உரை நிகழ்த்தினார். கவிஞரும் எழுத்தாளருமான திரு ப.பசுபதிராசா அவர்களை எமது சங்கத்தின் உதவிச் செயலாளர் திருமதி கீதா பரமானந்தன் பாராட்டி உரைநிகழ்த்தினார். கலைத்துறையிலும்  இலக்கியத் துறையிலும் திரு பசுபதிராசா அவர்கள் திறமை மிகுந்தவர்.அவரை எமது சங்கம் பாராட்டிக் கௌரவிப்பதால் பெருமையடைகிறது என்றார்.  பிரபல எழுத்தாளர் டென்மார்க்கைச் சேர்ந்த திரு.ஜீவகுமாரன் பற்றியும் எமது சங்கத்தின் பொருளாளர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் நயம்மிக்க கவியால் புகழ்ந்து பாடினார். 


நால்வருக்கும் பொன்னாடையும், மாலையும் அணிவித்தும் பட்டயங்கள் வழங்கியும் சங்கம் சிறப்புச் சேர்த்தது. சங்க உறுப்பினர்களான  திரு. ஏகானந்தராசா, திரு. குகதாசன், திரு. வரதராசன், திருமதி இராஜேஸ்வரி சிவராசா, திருமதி சாந்தினி துரையரங்கன் ஆகியோரும் பாராட்டுப் பெற்றவர்களுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து கௌரவித்தனர். கவிஞர் முகில்வாணன் கவிஞர் பசுபதிராசா, எழுத்தாளர் ஜீவகுமாரன் வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஐன் ஆகியோர் பாராட்டுக்களையும் மரியாதையையும் ஏற்றவர்களாய் சிறப்புற ஏற்புரையை நிகழ்த்தினார்கள். எமது சங்கத்தின் இச்செயற்பாட்டிற்காக நன்றியும், இச்சேவையைச் செய்யும் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புற வளரவேண்டுமெனவும் வாழ்த்தினார்கள். 

குதிரை வாகனம்' நாவல் அறிமுகவுரையை சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திருமதி கௌசி சிவபாலன் ஆற்றினார். மிகச்சிறப்பான அவர் உரையால் பாராட்டுகளை சபையோர் வழங்கத்தவறவில்லை. நூல் அறிமுகத்தில் திரு வி. ஜீவகுமாரன்  தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் நாவல்;, சிறுகதை இலக்கியம் பற்றி சிறப்பாகப்  நயத்தோடு எடுத்துரைத்தார். 

முதல் பிரதியை புலம்பெயர் எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த திரு. சபேசன் அவர்களும் புலம்பெயர் எழுத்தாளர் சங்கத்தலைவர் ஏலையா திரு. முருகதாசன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து சபையோர் மனவிருப்போடு மேடையில் வந்து நூலைப்பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து டென்மார்க்கிலிருந்து வருகைதந்த எழுத்தாளர் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார். 


எசன் நகர 'கனகசபை' கலாலய மாணவிகளான செல்விகள் சஜித்தா ஆசீர்வாதம், சாருகா ராகவன், சுஜித்தா பிரபாகரன், சுபேதா பிரபாகரன், நிதுசா ஆசீர்வாதம், சகானா பிரபாகரன் ஆகியோரின் சிறப்பான நடனம் ஒன்றை ஆடிச் சபையோரை மகிழ்வித்தனர். சங்க உறுப்பினர்களான கவிமணி குகதாசன் தர்மலிங்கம், திருமதி நகுலா சிவநாதன், இவர்களுடன் புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஏலையா முருகதாசன், எழுத்தாளர் திரு சபேசன். அகரம் சஞ்சிகை பிரதம ஆசிரியர் திருத.ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

சங்கஉறுப்பினர் திருமதி ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கமைப்பை சங்கத்தின்  உபதலைவர் திரு பொ. சிறிஜீவகன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். உறுப்பினர் திருமதி சாந்தினி துரையரங்கன் அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நீண்ட நாட்களின் பின்பு யேர்மனியில் நல்லதொரு இலக்கிய விழாவை ஏற்பாடு செய்த யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சேவையினைப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். சிற்றுண்டி, இராப்போசன விருந்துடன் இரவு எட்டு மணியளவில் விழா இனிதே நிறைவு பெற்றது. 
              10.12.2017 அன்று  தினக்குரல் பத்திரிகையில்  வெளிவந்த செய்தி 

3 comments:

 1. வணக்கம் அம்மா...
  நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழ்ந்ததைப் போன்ற பதிவு....
  மகிழ்ச்சி ....
  அன்புடன்,
  த.இராமலிங்கம்

  ReplyDelete
 2. மிக்க நன்றி .பாராட்டுக்கள்

  shanthini Ranga

  ReplyDelete
 3. கௌசி பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

  P.Puththisikamany

  ReplyDelete