Prev my images Next

Wednesday, October 25, 2017

சுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்களின் கந்தலோகக் கலாபம் நூல் வெளியீடு


பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் வாழ்த்துவதும் தமிழர்களின் பழமையான மரபாக எம்மோடும் உணர்வோடும் கலந்துதொடர்ந்து வருவது புதுமையல்ல. பாராட்டுகளும் கைதட்டல் ஒலியுமே ஒருகலைஞனுக்குக் கிடைக்கின்ற மிகப்பெரிய உற்சாகமானவிருதும் ஒளடதமுமெனலாம். ஒருகலைஞனின் திறமையைப் பாராட்டத்தவறினால், சமூகத்தில் அவனுக்கும் அவனின் கடைப்படைப்புக்கும் கிடைக்கின்ற அங்கீகாரம் தவறிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதில் தவறில்லை. எனவே படைப்பாளிகளை ஊக்குவிப்பதும் பாராட்டுவதும் எமது கடமையாகக் கருதவேண்டும். இந்த நிகழ்வும் இதனடிப்படையிலே அமைந்தது என்றால் மிகையில்லை.


இலங்கையிலும் ஐரோப்பிய மட்டத்திலும் சிறுகதைகளினால் தனக்கென ஒரு இடத்தினைத் தக்கவைத்துக்கொண்டு யதார்த்தங்களைப் படம்பிடித்து கதைகளாகவடிக்கும் கைவந்த எழுத்தாளர்களில் ஒருவர்தான் யேர்மனி சாபுறுக்கன்-டிவ்பேர்ட்ரன் நகரில் வசித்துவருகின்ற திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன். இவர் ஆரம்பகாலத்திலிருந்தே யேர்மனி தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்துடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு சங்கத்தின் வளர்ச்சியில் மிகவும் அக்கறையுடன் தொழிற்பட்டுவருகின்ற சிறந்த படைப்பாளி. இவரின் பல கதைகள், பணப்பரிசில்களுடன் தங்கப்பதக்கங்களையும் வென்று இன்னும் பலரின் மனங்களில் வாழ்கின்றன.

இந்தப்படைப்பாளியின் இன்னொரு வெளிப்பாடாக உருவான படையல்தான் கந்தலோக கலாபம் எனும் நூலாகும். அதாவது, சமூகத்தின் அவலங்களையும் வலிகளையும் கதைகளாகச்சொல்லும் இந்தப்படைப்பாளியின் வேறு ஒரு முகமான ஆன்மீகத்தேடலின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்து வெளிவந்திருக்கிறது எனலாம். இவர், கந்தபுராணக்கதைகளை மிக இலகுவாகவும் எளிமையாவும் தன்னுடைய சிறப்பான, இனியநடையில் வெளிப்படுத்திய ஒரு பொக்கிஷம்தான் கந்தலோக கலாபமாக எம்முன் காட்சியளிக்கிறது.

இவர், இன்றும் தன் சமூகப்பணிகளுடன் இலக்கியப்பணிகளையும் செவ்வனே செய்து வெற்றிகண்டவர். எழுத்துப் பணிகளினால் யேர்மனி தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்துடன் தனது நெருக்கத்தினைப் பேணி வருவதனாலும் சமூக நல மேம்பாட்டுக்கான அக்கறையுடனும் செயற்படுவதனால்தான், இவருடைய இந்தக்கலைப் படைப்பின் வெளியீட்டின்போது யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கமானது தன் அனுசரணையை வழங்கியதுடன், சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினைச்  சிறப்பித்ததுடன்  வாழ்த்துக்களையும் வழங்கிக் கௌரவித்தனதென்பது வெளிப்படை.


திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில்  எமது எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும் யேர்மன் தமிழ்க்கல்விச்சேவையின் பொறுப்பாளருமான தமிழ்மணி பொன்.ஸ்ரீஜீவகன் அவர்கள் நெறிப்படுத்தித் தொகுத்துவழங்கிய இந்நிகழ்வானது, கடந்த 15.10.2017 அன்று ஞாயிறு காலை சால்புறுக்கன் நகரிலுள்ள அல்ரன்வால்ட் ஸ்ரீமகாமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

அன்றைய தினம் பாலச்சந்திரன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் என்ற காரணத்தினால் ஸ்ரீமகாமாரி அம்மன் ஆலயத்தில் விசேஷ பூஜை ஏற்பாடாகியிருந்தது. விசேஷ பூஜையில் பங்கெடுத்தக்கொண்ட தம்பதிக்கு, ஸ்ரீமகாமாரி அம்மனின் அருளும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்வகையில் ஆலயதர்மகர்த்தா விசேட அபிஷேக கிரிகைகள் செய்ததுடன் தனது ஆசிகளையும் நல்கினார். பூஜையில் கலந்துகொண்ட் பாலச்சந்திரன் தம்பதியரின்  உறவினர்களும் எழுத்தாளர் சங்கத்து உறுப்பினர்களும் மேலும் பல அன்பர்களும் சிறப்பு வாழ்த்துக்களைத்  தெரிவித்து மகிழ்ச்சியில் பங்கெடுத்தனர்.இதனைத்தொடர்ந்து நூல்வெளியிட்டு நிகழ்வு சுமார் 14 மணியளவில் ஆரம்பமானது. இலங்கை மெல்லிசைப்பாடகர். திரு.கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து, திரு.திருமதி. பாலச்சந்திரன் கந்தலோக கலாபம் நூலினை வெளியிட, அல்ரன்வால்ட் ஸ்ரீமகாமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தா முதல்  பிரதியைப்பெற்றுக்கொண்டு தனது ஆசிகளைத்தெரிவித்தார். தொடர்ந்து, ஆலய நிர்வாகப்பொறுப்பாளர், உறவிர்கள் நண்பர்கள் படைப்பாளிகள் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்து உறுப்பினர் பலரும் பெற்றுக்கொண்டு திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரனை  வாழ்த்தினர்.
மேலும், சாபுறுக்கன்-டிவ்பேர்ட்ரன் நகர் தமிழாலய ஆசிரியையின் நூல் விமர்சனத்தை அடுத்து, திரு.திருமதி. பாலச்சந்திரன் தம்பதிகளின்  உறவினர்களில் ஒருவர் யேர்மனி தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தினருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், சங்கத்தின் கடந்தகால சாதனைகளைப் பட்டியலிட்டு  அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். மேலும் சங்கத்து உறுப்பினர்கள்,  திரு.திருமதி. பாலச்சந்திரன் இருவருக்கு  பொன்னாடையணிவித்து மலர்மாலை சூட்டிமகிழ்ந்தனர். சங்கத்தலைவர்  வ.சிவராசா அவர்கள் நூலாசிரியையை வாழ்த்தியதுடன், இலங்கையில் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரனும் தானும் ஒன்றாகப் பணிபுரிந்தமையையும் நினைவுகூர்ந்தார். இதனையடுத்து, சங்கத்தின் செயலாளர் திரு.பொன் பத்திசிகாமணி தனது வாழ்த்துரையில்  திருமதி. பாலச்சந்திரன் அவர்களின் எழுத்தின் ஆளுமையையும் சங்கத்துடனும் சமூகத்துடனும் அவர் கொண்டுள்ள  அக்கறையினையும் குறிப்பிட்டார். தொடர்ந்து, சங்கத்தின் பொருளாளர் திரு. அம்பலவன் பு   வனேந்திரன் அவர்கள் வடித்து வாசித்த வாழ்த்து மடலை  யேர்மனி தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்களிடம் கையளித்தார். விழாவில்  கலந்து சிறப்பித்த சில அன்பர்களின் வாழ்த்துரைகளும்  நிகழ்வுக்கு சிறப்புச்சேர்த்தன. தொடர்ந்து, திரு.திருமதி. பாலச்சந்திரன் அவர்களின் ஏகபுதல்வனின் நன்றியுரையினைத் தொடர்ந்து நூலாசிரியையின் ஏற்புரை இடம்பெற்றது. திரு. பாலச்சந்திரன் அவர்கள் நிறைவுரை வழங்க எமது எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவர் தமிழ்மணி பொன்.ஸ்ரீஜீவகன் அவர்கள் நெறிப்படுத்தித் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வானது மதியபோசன விருந்துபசாரத்துடன் இனிதே நிறைவுகண்டது.

      
யேர்மனி- தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக. 

கவிச்சுடர் அம்பலவன் புவனேந்திரன் 

No comments:

Post a Comment