Prev my images Next

Thursday, August 2, 2018

நெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்

இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமே புகழ்பெற்ற பல பெண்பாற் புலவர்கள் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவையாற்றியுள்ளார்கள். சங்ககாலத்தில் சுமார் 37 பெண்புலவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பாடிய சுமார் 185 பாடல்கள் கடல்கோள்களுக்கு அகப்படாது எமக்குக் கிடைக்கின்றன. அவர்கள் ஆதிமந்தையார், பொன்முடியார், நக்கண்ணையார், அவ்வையார், ஒக்கூர் மாசாத்தியர், வெள்ளிவீதியார் போன்றோர் என அறியக் கிடக்கின்றது. அதில் அணு என்பது பிளக்க முடியாத அளவு மிகச் சிறியதுகள். அவ் அணுவைப் பிளக்கும் போது பிரமாண்டமான ஒரு சக்தி தோன்றும். அதாவது ஏழுகடல் அளவு சக்தி தோன்றும். ஒரு கடலின் ஆழமே அறிய முடியாது இருக்கும் போது 7 கடல் அளவு சக்தியை புகட்டிய குறள் என்னும் விளக்கத்தை
 
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
 குறுகத் தரித்த குறள்


         என்று திருக்குறளின் பெருமையை அறிவுபூர்வமாக எடுத்துக் கூறிய அவ்வையார் என்னும் பெண்பாற்புலவர் பாடிய பல பாடல்கள் பல எமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.

       முருகக் கடவுளிடம் நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்ட போது சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று வினாவிய முருகக் கடவுளை பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ்ஞானப் பழம் நீயப்பா என்று பாடிப் புகழ்ந்த அவ்வையார் பாடல்களையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், பாடிய அவ்வையார் பாடல்களையும், குறுநிலமன்னன் அதியமான் காலத்தில் வாழ்ந்த அவ்வையார் பாடல்களையும் எடுத்து ஆராயப் புகுந்தால், பாடல்வரிகளில் தன்மையை நோக்கும் போது அவ்வையார் என்பவர் ஒருவரே என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது உள்ளது.

        உதாரணமாக
அறஞ்செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று தொடருகின்ற ஆத்திசூடிப் பாடல்களையும்,
 
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து


என்னும் புறநானூறு பாடல்வரிகளையும் எடுத்து நோக்கினால், வேறுபட்ட கவித்துவத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அவ்வையார் என்னும் பெயருடைய வௌ;வேறு பெண் புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

               திருமணம் செய்யாமல் கல்வி கற்று சமூகப்பணிகளுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்களே அவ்வை என்னும் பெயரால் அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். அவ்வழியில் சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையார், குறுநில மன்னன் பாரி வள்ளல் பிள்ளைகளான அங்கவை சங்கவை காலத்தில் வாழ்ந்த அவ்வையார்இ சோழர் காலத்தில் கம்பர் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த அவ்வையார். பிற்கால ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைத் தந்த அவ்வையார் என  அவ்வையார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

       சங்ககாலத்து அவ்வை தற்போது மலையாளம் என்று சொல்லப்படுகின்ற சேரநாட்டிலே தர்மபுரி என்று தற்போது அழைக்கப்படும் தகடூர் எனப்படும் தலைநகரத்திலே யாளிதத்தனுக்கு மகளாகப் பிறந்தாள். பிள்ளை 3 வயதாக இருக்கும் போது தாய் இறக்கும் தறுவாயில் கலங்கி நிற்க
இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
 விட்டசிவனுஞ் செத்து விட்டானோ – முட்ட
 முட்டப்பஞ்ச மேயானாலும் பாரமவ னுக்கன்னாய்
 நெஞ்சமே அஞ்சாதே நீ


என்று பாடியதாகவும். அக்கணமே கவலை நீத்த தாய் உயிர்நீத்தாள். தந்தையும் உறவினர் வசம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இவர் கல்வி, சமயப்பற்று அத்தனையும் பெற்றவராய் சமுதாய சமயப்பணிக்காய்த் தன்னை ஒப்படைத்து நல்லறிவாற்றலுள்ள பெண்ணாய் வளர்ந்தாள் என வரலாற்று நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலம் கி.மு.300 – கி.பி 250 வரையுள்ள காலப்பகுதிகளாகும். இவர் பாடல்கள் சங்கப் பாடல்களான அகநானூறுஇ புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றிலே தொண்டைமான், பாரி, அதியமான், எழினி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சோழன் பெருநற்கிளி, சேரன் மாரி வெண்கோ போன்ற மன்னர்களைப் பற்றிய பாடல்களில் காணக்கிடக்கின்றன.

          இவர் அக்கால குறுநில மன்னன் அதியமான் புகழ்பாடிப் பரிசில்கள் பெற்றுள்ளார். அவர் பெருமை கண்ட மன்னனும்,  அவரை அரசவைப் புலவராக அமர்த்தினார். இம்மன்னனிடம் சிறப்புப் பொருந்திய 12 ஆண்டுக் கொருமுறை காய்க்கின்ற கருநெல்லிக்கனியைப் பொதிகைமலை வாழ்ந்த தவமுனிவர் வழங்க அக்கனியை நீண்ட காலம் வாழ வேண்டிய ஒளவைக்கு அதியமான பரிசாகக் கொடுத்தான்.

அதியமானுடன் தொண்டைமான் போர் புரிய ஆயத்தமான போது போர் நடக்காதவண்ணம் தடுப்பதற்காக தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார். தொண்டைமான் படைக்கலக் கொட்டிலைக் காட்டியபோது
 
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
 கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
 கடியுடை வியனகரவ்வேஇ அவ்வே
 பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
 கொல்துறைக் குற்றிலமாதோ


மன்னனே உன்னுடைய அரண்மனையிலேயுள்ள படைக்களங்கள் யாவும் போர்க்களத்தைக் காணாததால் மயில்பீலி அணியப்பெற்று, மாலை சூட்டப்பெற்று, நெய்பூசப்பெற்று அழகுடன் காணப்படுகின்றன. ஆனால், அதியமானின் வேல்கள் நாளும் பகைவர்களைப் போரில் குத்துதலால், முனைகள் முறிந்து சிதைந்து கொல்லன் உலைக்களத்திலே குவிந்து கிடக்கின்றன என்று அதியமான் பெருமையைப் பாடி தொண்டைமான் போரை நிறுத்தினார்.

                   சோழர்காலத்து 12ம் நூற்றாண்டு வாழ்ந்த ஒப்பற்ற புலவர்களான கம்பர்இ ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பொய்யாமொழி போன்றோர்க்கு ஒப்பாக அருங்கவியாற்றிய அற்புதத் தமிழ் புலவர் அவ்வையார் பற்றிய ஓர் சம்பவத்தை எடுத்து வருகின்றேன். மன்னர்களைப் புகழ்ந்து பாடலும் அப்பாடலுக்கு மனமுவந்த மன்னர்கள் பரிசில் வழங்கலும் அக்காலத் தமிழ் பற்றுக் கொண்ட மன்னர்களின் மனப்பாங்கு. ஒரு மாமன்னனைக் காண அவ்வையார் செல்கின்றார். அம்மையே நீவீர் எந்த ஊர் என்று மன்னன் கேட்க

காலொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூர மெளிதன்று கூனல்
கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே யீடம்

வளைந்த சங்கு தேனையுண்பதற்காக வாய் திறந்துள்ள நாட்டுக்கு வல்லவனே! காவிரி நதி சூழ்ந்த நாட்டின் மன்னனே! உன்னைக் காண்பதற்காக நெடுந்துரம் பரபரப்போடு  நடந்து வந்தேன். அதனால், கால் நொந்தேன், ஆங்காங்கே தங்கினேன். அதனால், எந்த ஊர் எனக்குச் சொந்த ஊர் என்பது என்று கூறுகின்றார்.

        அதைக் கேட்ட மன்னனும் அரியணை காட்டி அமரச் செய்ய, அவ்விடத்தில் கம்பர் பாடல் ஒன்று படிக்கப்படுகின்றது. மன்னனும் கம்பருக்கு நிகர் யாருண்டு என்று புகழ்ந்துரைக்க
 
விரக ரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
 விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
 பஞ்சேனும் பட்டேனும் வேண்டு மவர்கவிதை
 நஞ்சேனும் வேம்பேனு நன்று

சூழ்ச்சிக்காரர் இருவர் தன்னைப் புகழ்வதற்காக வேண்டும், எல்லா விரல்களிலும் மோதிரங்கள் வேண்டும், பஞ்சால் அல்லது பட்டால் ஆடை அணிந்திருக்க வேண்டும், அவர்கள் எழுதிய கவிதை வேம்பாக இருந்தாலும் நல்லது என்று அவ்வையார் எழுந்து அவ்விடத்தில் பாடுகின்றார்.

இதுகேட்ட மன்னன் உலகத்து உண்மை இதுவாகிலும் அம்மையே! கம்பர் சிறப்பான கவி புனையும் ஆற்றல் மிக்கவர் என்று கூற

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லோர்க்கு மொவ்வொன்று றெளிது

தூக்கணாங்குருவியின் கூடு, கரையான் புற்று, தேன்கூடு, சிலந்திக்கூடு, ஆகியவை யாராலும் இலகுவாகச் செய்து முடிக்கக் கூடியதல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது. அதனால், யாம் பெரிதும் வல்லோம் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று பாடினார். அத்துடன் எவ்வாறு புலமை கம்பருக்கு வந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்ட

சித்திரமுங் கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையு நடைப்பழக்க நட்புந் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

என்று கூறி

காணாமல் வேணதெல்லாம் கத்தலாங் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
கீச்சுக்கீச் சென்னுங் கிளி

என படிப்பு என்னவென்று அறியாதவர்கள் படித்தவர்கள் முன்னே வெட்கப்படாமல் நினைத்ததெல்லாவற்றையும் கூறலாம் ஆனால், படித்தவர்கள் முன்னே பணியாமல் இருக்கக் கூடாது. அது எப்படியென்றால் கிளி பெரும் பூனை வந்தால் கீச்சுக்கீச்சென்று கத்துவதைப் போன்றது.

இவ்வாறு பாட அவ்வை மதிநுட்பம் அறிந்த மன்னனும் அம்மையே! தங்கள் பெயர் எதுவென்று உரைக்க அவ்வை என்கின்றார். ஆ… அவ்வையா! என்று துடிதுடித்த  மன்னனும் அவரை அரியாசனத்தின் தன் பக்கத்தில் இருத்துகின்றார்.

இவ்வாறு கல்வி ஆற்றல் மிக்க தைரியமான அவ்வையார் சோழர்காலத்தில் வாழ்ந்திருக்கின்றார். பிற்கால அவ்வையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை விதைக்கும் இலகுதமிழ் பாக்களை யாத்திருக்கின்றார் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது.

         எப்போது வாழ்ந்த அவ்வை என்று காலக்கணிப்பீட்டில் மயக்கம் இருந்தாலும் அவ்வையார் என்ற பெயரிலே எமக்குக் கிடைக்கும் அத்தனை பாக்களும் எமது உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவதாகவே உள்ளன
.

www.gowsy.comஉசாத்துணை நூல்களும் இணையப்பக்கங்களும்


      
தனிப்பாடல் நகைச்சுவை – வே.ந.கபிலர்
ஒளவையார் வாழ்வும் வாக்கும் – பேராசிரியர் தி. முத்து
 

Tuesday, June 19, 2018

கீத்தா பரமானந்தன் அவர்களின் சுவடுகள், முகவரி என்னும் இரு நூல்கள் வெளியீடு


எழுத்தாளரை பிரதம விருந்தினர் கௌரவிக்கின்றார்              பிரதம விருந்தினரை எழுத்தாளர் கௌரவிக்கின்றார்
  
10.06.2018  அன்று கீத்தா பரமானந்தன் அவர்களுடைய முகவரி என்னும் கவிதை நூலும் சுவடுகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலும் 

öffentlicher Begegnungstätte Kevelaer, Bury St. Edmund Str , 47623 Kevelaer(ஜேர்மனி)  என்னும் இடத்தில் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.


எழுத்தாளர் கௌசி அவர்களை கீத்தா பரமானந்தன் அவர்கள் கௌரவிக்கின்றார்
            இந்நிகழ்ச்சி முழுவதினையும் ஈ.ரி.ஆர் வானொலி அதிபர் இரவீந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிகழ்வுக்கு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத் தலைவர் வ.சிவராசா அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து கலாநிதி அனுஷியா சத்தியசீலன் (கல்வியியல் துறை, யாழ் பல்கலைக்கழகம்)  வருகை தந்திருந்திருந்தார். சிறப்பு விருந்தினராக கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் (வெற்றிமணி ஆசிரியர்) வருகை தந்திருந்தார். எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. 

ஜேர்மனி கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீ ஜீவகன் அவர்கள்
பிரதம விருந்தினர் கலாநிதி அனுஷியா சத்திய சீலன் 
சிறப்பு விருந்தினர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்


எழுத்தாளர் ஏலையா முருகதாஸ் 


மங்கள விளக்கேற்றல் எழுத்தாளர் வசந்தா ஜெகதீசன் சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜா


                               கீதா பரமானந்தன் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜா அவர்கள் பாடினார். அபிதா ரமேஸ் வரவேற்பு நடனம் வழங்கினார். தலைமையுரையை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் வ.சிவராஜா அவர்கள் வழங்கினார். 

                                                        செல்வி வேதிகா ஜெகதீசன்
         வரவேற்புரையினை ராம் பரமானந்தன் அவர்களும் சிறுகதை நூல் அறிமுகத்தினை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர் பொன். புத்திசிகாமணி அவர்களும்இ சிறுகதை நூல் விமர்சனத்தினை எழுத்தாளரும் ஜேர்மனி தமிழ் எழுத்தாளா சங்க செயற்குழு உறுப்பினருமாகிய சந்திரகௌரி சிவபாலன்(கௌசி) அவர்களும் கவிதை நூல் அறிமுகத்தினை ஜேர்மனி எழுத்தாளர் சங்க பொருளாளர் கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் அவர்களும்இ கவிதை நூல் விமர்சனத்தினை தமிழர் அரங்க உரிமையாளர் வி.சபேசன் அவர்களும் வழங்கினர். 

                                 
                 ஜேர்மனி  எழுத்தாளர் சங்கம் வாழ்த்துமடல் வழங்கல் 


                                  
                                      ஜேர்மனி தமிழ்எழுத்தாளர் சங்க செயலாளர்
                                                                பொ. புத்தி சிகாமனி
                
       கீத்தா பரமானந்தனை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையினர்  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தனர். தொடர்ந்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் நூலாசிரியைப்பாராட்டி வாழ்த்து மடல் வாசித்துக் கையளித்ததுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தனர்.

                              
                                  E.T.R வானொலி உரிமையாளர் திரு.ரவீந்திரன்


              நிகழ்ச்சிகள் வரிசையில் செல்வி வேதிகா ஜெகதீசன் நடனம் ஆடி அரங்கைச் சிறப்பித்தார். செல்வன் ராம் பரமானந்தன், செல்வி அபிராமி பரமானந்தன்இ செல்விகள் சாதனா பதஞ்சலிஇ மயூரி  பதஞ்சலி ஆகியோர் சங்கீத இசை வழங்கினர். திரு.பரமானந்தன் அவர்கள் நூலாக்கத்தில் ஏற்பட்ட சிரமங்களையும் கீதா அவர்களின் அற்பணிப்பினையும் பாராட்டடி தன் வாழ்த்தினை வழங்கினார். கீத்தா பரமானந்தன் ஏற்புரை வழங்க அபிராமி பரமானந்தன் நன்றியுரை வழங்கினார்.
  
                                    
                                         தமிழ் அரங்கப் பொறுப்பாளர்   திரு.சபேசன்